
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையைக் கணக்கிட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் ஒன்று முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.