சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் (KOICA) ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய இலங்கையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளின் முன்னேற்றத்துக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என கொரியப் பிரதமர் கௌரவ ஹன் டக் சூ, இலங்கை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் உறுதியளித்தார்.
கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சியோல் நகரில் நடத்திய சந்திப்பிலேயே (06) கொரியப் பிரதமர் இவ்வாறு உறுதிமொழி வழங்கினார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிக்கும் வகையிலான புதிய மேம்படுத்தல்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு கொரியா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது தெரிவித்தமை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் உண்மையான நட்பு நாடு என்ற ரீதியில் பல தசாப்தங்களாக இரு நாட்டுக்கும் இடையில் காணப்பட்டு வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
கொரியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கொரியாவின் கைத்தொழில்கள் தற்போதுள்ள அதி நவீன தொழில்நுட்பங்களுடன் செயற்பட வேண்டியிருப்பதால், கொரிய நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்நாட்டில் தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார். ஏற்கனவே ஏறத்தாழ 20,000ற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியாவில் பணிபுரிந்து வருவதாகவும், இலங்கைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக கொரிய முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்படி, வருடாந்தம் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இரு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒன்றிணைந்த பொருளாதார ஆணைக்குழுவொன்றை (Economic Joint Commission) அமைப்பதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இயற்கை மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்க இலங்கைக்கு விஜயம் செய்வதில் கொரியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கொரியப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கைக்கு வரும் கொரிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்நாட்டின் கல்வித் துறையில் நவீன தொழில்நுட்ப பாடங்களை உள்ளடக்குவதற்கு தேவையான ஆதரவைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதனால், சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் ஊடாக (KOICA) இதற்கான ஆதரவு வழங்கப்படும் என்று கொரிய பிரதமர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.