இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென கருதப்படும் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரையிலானது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.