இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் அவர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், தற்போதுள்ள விவசாய ஆய்வு நிறுவனம் மறுசீரமைத்து, நவீனமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.