crossorigin="anonymous">
உள்நாடுபொது

நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் 2வது மதிப்பீடு மீதான விவாதம் ஜனவரி 23, 24

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

2024 ஜனவரி இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்றக் கூட்டங்களை ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 25ஆம் திகதி வியாழக்கிழமை போயா விடுமுறை என்பதால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய ஜனவரி 23ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் கொண்டுவரப்படும் சட்டக் கல்வி பற்றிய மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பான தீர்மானமும் முன்வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், ஸ்ரீலங்க பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம், ஸ்ரீ பாலபிவூர்தி வர்தன சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம், தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சவீர மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படுவதுடன் சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது நாள் விவாதம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் 2356/20 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் 2363/26 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை என்பன விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

அதன் பின்னர், சுமார் 40 வருடங்களாக பாராளுமன்றத்தில் கடமையாற்றி ஓய்வு பெறவுள்ள படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டுவதற்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 + = 27

Back to top button
error: