டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது என்றும் அதனால் சிறந்த உலகை உருவாக்க வலுவான மற்றும் ஒன்றிணைந்த அணிசேரா அமைப்பின் ஊடாக மேற்படி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உகண்டா – கம்பாலா நகரில் “உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று (19) ஆரம்பமான அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவேனியின் (Yoweri Museveni) தலைமையில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த மாநாடு நேற்றும் இன்றும் (20) நடைபெறுகிறது.
மாற்றமடைந்துவரும் உலகிற்கு ஏற்றவாறு அணிசேரா நாடுகள் அமைப்பின் நோக்கங்களை மீளமைப்புச் செய்து, தென் துருவத்தில் அதிக அங்கத்துவம் கொண்ட அமைப்பாக மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
அந்த மாற்றம் செல்வந்த நாடுகளின் மோதல் மற்றும் அதற்குள் தலையீடுகள் செய்யாத நாடுகளை உள்ளீர்ப்பதற்கான அழுத்தங்களுக்கு எதிரானதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அதேபோல் தென் துருவ நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தும் நோக்கங்களை நிறைவேற்றும், பல்முனை உலகை கட்டியெழுப்புவதற்கு அணிசேரா நாடுகளின் அமைப்பு ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.