58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் இலங்கையில் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்தக்கூடுமெனவும், ஜனநாயக விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு உள்ளிட்ட 58 அமைப்புகள், உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினதும் ஆலோசனைக்கு அமைய, அதனை தயாரிக்க வேண்டுமென ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம், குற்றங்கள் தொடர்பிலான எதனையும் விட விரிவான அர்த்தப்படுத்தல், சுயாதீன மேற்பார்வை இன்மை, நிறைவேற்றதிகாரத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படும் அபாயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
பொய்யான கருத்துகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் காணப்படும் தௌிவற்ற அர்த்தப்படுத்தலின் ஊடாக ஊடக தணிக்கை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு குறிப்பிட்டுள்ளது.