ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நேற்று (01) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
இதற்கு அமைய பெப்ரவரி 08ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 07ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வைபரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதுடன், அன்றையதினம் பாராளுமன்றத்துக்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதியினால் மு.ப 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளது.