இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு” எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை இம்மாதம் எதிர்வரும் 07 ஆம் திகதி (07.02.2024) புதன் கிழமை கொழும்பு- 07, ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை முஸ்லிம்களது சிவில் சமூக அமைப்புகளது குடை நிறுவனமாக தேசிய சூரா சபை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை நாட்டின் இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வு, சமாதான சகவாழ்வு, தேச ஒருமைப்பாடு என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தேசிய சூரா சபை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் உரிமைகள் என்பவற்றை பேணும் வகையில் கலந்தாலோசனை மற்றும் நிபுணத்துவ புத்திஜீவித்துவ சபையாகவும் செயற்பட்டு வருகிறது.
தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் விசேட பேச்சாளர்கள்களாக வல்பொல ராகுல நிறுவனத்தின் பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், முன்னால் வெளிநாட்டு தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்,
ஜாமியா நளீமியாஹ் கலாபீடத்தின் இஸ்லாமியா கற்கைகளுக்கான பிரிவின் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் இன மத பேதமின்றி அனைவறும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.