இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு (03) இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவீசின் முன்னிலையில் இடம்பெற்றது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தம் வெச்சயச்சாய் மற்றும் இலங்கையின் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கை 22 மில்லியன் சனத்தொகையை கொண்டிருக்கும் அதேநேரம் இலங்கையின் 37 ஆவது ஏற்றுமதி நாடாக காணப்படும் தாய்லாந்து 71.6 மில்லியன் சனத்தைகையை கொண்டிருக்கிறது.
இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலை, மிளகு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டண தீர்வை வரியை தாய்லாந்து விதித்துள்ளது. இலங்கை 2022 ஆம் ஆண்டில் 58.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 495 மில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த தேசிய வருமானமாக ஈட்டிய ஆசியான் (ASEAN) நாடாக தாய்லாந்து காணப்படுகிறது.
தாய்லாந்து நாடுகள் 17.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாடுகளில் முதலீடு செய்திருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் ஆசியான் சங்கத்தில் மிகப் பெரிய முதலீட்டு நாடாகவும் தாய்லாந்து மாறியிருந்தது. 2005 – 2022 வரையான காலப்பகுதியில் இலங்கையில் தாய்லாந்து 92 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நேரடி முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட இருதரப்பு வர்த்தகப் பெறுமதியை 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் மூன்று மடங்காக அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான முதன்மை சாத்திமாகக் காணப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், பொருட்கள் வர்த்தகம், வர்த்தக சட்ட அனுமதி, சுகாதார மற்றும் மூலிகை சுகாதார செயன்முறைகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், வர்த்தகத் தீர்வுகள், சேவை வர்த்தகம், முதலீடுகள், சுங்கச் செயற்பாடுகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துக்களின் உரிமம், அடிப்படை ஏற்பாடுகள், நிறுவன மற்றும் இறுதி செய்யப்பட்ட ஒதுக்கீடுகள், வௌிப்படைத் தன்மை மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட துறைகளை உள்வாங்கும் வகையில் 14 அத்தியாயங்களுடன் கூடிய விரிவான 09 சுற்றுகளில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. 1950 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் வகையிலும், இந்த புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை உறவுகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் கையெழுத்தானது.
இலங்கை தரப்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தாய்லாந்திற்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜக்கபொங் சங்மானி(Jakkapong Sangmanee) ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன் பின்னர் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் மிக உயர்தர இரத்தினக்கற்கள் சர்வதேச ரீதியில் நன்கு பிரபல்யமானவை என்பதுடன் தற்போது சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள தாய்லாந்து, அந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, இரு நாடுகளிலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறை தொடர்பான அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
இலங்கை இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.ஜி.ஆர்.டபிள்யூ. கம்லத் மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனப் பணிப்பாளர் சுமேத் பிரசோங்பொஞ்சாய் (Sumed Prasongpongchai) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
#இலங்கையின் #சுதந்திரத்திற்கு #முஸ்லிம்களின் #பங்களிப்பு
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபையின் நிகழ்ச்சி
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு” எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை இம்மாதம் எதிர்வரும் 07 ஆம் திகதி (07.02.2024) புதன் கிழமை கொழும்பு- 07, ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை முஸ்லிம்களது சிவில் சமூக அமைப்புகளது குடை நிறுவனமாக தேசிய சூரா சபை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை நாட்டின் இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வு, சமாதான சகவாழ்வு, தேச ஒருமைப்பாடு என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தேசிய சூரா சபை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் உரிமைகள் என்பவற்றை பேணும் வகையில் கலந்தாலோசனை மற்றும் நிபுணத்துவ புத்திஜீவித்துவ சபையாகவும் செயற்பட்டு வருகிறது.
தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் விசேட பேச்சாளர்கள்களாக வல்பொல ராகுல நிறுவனத்தின் பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், முன்னால் வெளிநாட்டு தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்,
ஜாமியா நளீமியாஹ் கலாபீடத்தின் இஸ்லாமியா கற்கைகளுக்கான பிரிவின் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் இன மத பேதமின்றி அனைவறும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது