இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்புக்கள்
“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-
• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.
• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கிகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.
• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
“நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை” சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகப் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் (20) அறிவித்தார்.
சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றன:–
5(3)(ஆ), 3(இ) ஆம் வாசகங்களுடன் வாசிக்க வேண்டிய 20(3)(ஐ), 70 ஆம் வாசகத்துடன் வாசிக்க வேண்டிய 20(3)(ஒ), 20(3)(ஓ), 3(இ) ஆம் வாசகங்களுடன் வாசிக்க வேண்டிய 20(3)(ஞ), 20(3)(ட), 20(4)(இ), 32(1), 60, 76 மற்றும் 84 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழிந்துள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
39(2) மற்றும் 60 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளுடன் வாசிக்க வேண்டிய 76 ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்யுடன் அவை நிறைவேற்றப்பட வேண்டும் அத்தோடு 83 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கிகரிக்கப்படுதலும் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழிந்துள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
65 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(அ) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழிந்துள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
அதன் பிரகாரம், உயர்நீதிமன்றத்தினால் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், குழுநிலையின் போது மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தச் சட்டம் அல்லது அதன் ஏற்பாடுகள் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுடன் இணங்கும் என உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பினை சமர்ப்பித்துள்ளது.
ஐந்து சட்டமூலங்கள் சான்றுரைப்படுத்தப்பட்டன
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 பெப்ரவரி 19 ஆம் திகதி “இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்), ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்)(திருத்தம்), ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சங்கம் (கூட்டிணைத்தல்), சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) மற்றும் தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலங்களில் கௌரவ சபாநாயகரினால் சான்றுரை எழுதப்பட்டிருப்பதாகப் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார்.