பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கிரிக்கெட்டும்
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஒரு நாட்டையே ஆளும் அளவுக்கு கிரிக்கெட் வீரர்களால் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் .
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் இம்ரான் கான். இவரது அப்பா ஒரு பொறியாளராக இருந்ததால், வசதியான சூழலில் வளர்ந்தார். தனது 9-வது வயதில், ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர், தனது 16-வது வயது முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1971-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த அவர், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகளால், அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார்.
88 டெஸ்ட் போட்டிகளில் 3,807 ரன்களைக் குவித்ததுடன் 362 விக்கெட்களை இம்ரான் கான் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 175 ஒருநாள் போட்டிகளில் 3,709 ரன்களைக் குவித்ததுடன் 182 விக்கெட்களை எடுத்துள்ளார்.
அவரது தலைமையின் கீழ் 1987-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி, அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் மனமுடைந்த இம்ரான் கான், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜியா உல் ஹக்கின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஆடவந்தார்.
1987-ல் வெல்ல முடியாத உலகக் கோப்பையை, 1992-ல் பாகிஸ்தானுக்கு பெற்றுக் கொடுத்தார். இதனால் அவரது புகழ் பாகிஸ்தானில் அதிகரித்தது. அரசியலிலும் அவர் உச்சத்துக்கு வர இது உதவியது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில், அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.(இந்து)