crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு துறைமுக நகரின் முதல் 5 ஆண்டுகளில் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பு

பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு துறைமுக நகரின் முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75 சதவீதமாவது இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர்,

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை இன்று இந்த சபையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த கட்டுமானத்திற்கு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி சீ ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதியான எனது தலைமையிலேயே அடிக்கல் நாட்டப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

அவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பாரிய திட்டத்தின் மூலம் இன்று 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை இலங்கையுடன் இணைப்பதற்கு முடிந்துள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

அப்புதிய நிலப்பரப்பு 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முந்தைய அரசாங்கத்தினால் கொழும்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதுடன், இதுவரை ‘கொழும்பு துறைமுக நகரம்’ என்று குறிப்பிடப்படுவதன் மூலம், இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் வாய்ப்புகள் பலவற்றை பெற்றுக்கொள்ள எமக்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் முழு பலன்களையும் பெறுவதற்கு, இந்த நகர்ப்புற வளாகத்தின் மூலம் பாரிய முதலீடுகளை நாட்டினுள் ஈர்ப்பதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக கட்டமைப்பை சரியாக நிறுவ வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு இப்போது ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கட்டமைப்பை நமக்கு சரியாக தயாரிக்க முடியுமாயின், அதனூடாக நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புதிய நகர கட்டுமான பணிகளின் ஊடாக முதல் 5 ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் முதல் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக சுமார் எண்பத்து மூவாயிரம் புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு கிட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

உலகின் எந்த நாட்டிலும் தங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இன்று முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதேவேளை, அந்நிய முதலீட்டை ஈர்க்க இன்று உலகில் நிறைய போட்டி நிலவுகிறது. எனவே, முதலீடுகளை எதிர்பார்க்கும் நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய ஊக்கத்தொகை, வசதிகள் மற்றும் சேவைகள் என்பன மிக உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக நகரத்திலும் அவ்வாறு இடம்பெற வேண்டுமாயின், தமது செயற்பாடுகள் மற்றும் பொறுப்பை சிறப்பாகச் செய்யும் திறமையான ஆணையமொன்றினால் இந்நகரம் நிர்வகிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இப்புதிய நகரத்தில் முதலீடு செய்ய முன்வரும் அனைத்து முதலீட்டாளர்களும் எவ்வித தடைகளும் இன்றி புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உகந்த வணிகச் சூழல் அமைய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு தற்போது நமது நாட்டில் பல முதலீட்டாளர்களை பாதிக்கும் நியாயமற்ற தடைகள், நேர வீணடிப்பது, எதிர்பாராத செலவுகள், அதிகாரத்துவ தாமதங்கள், அவசரகால கொள்கை மாற்றங்கள், முதலியவற்றை இந்த புதிய நகரத்தில் குறைக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு ஒரு தீர்வாக, எமது அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒற்றை ஜன்னல் வழியாக நகரத்திற்குள் ஈர்க்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவர்களின் முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு உகந்த சூழலை உருவாக்குவதாகும். எந்தவொரு முதலீட்டாளரும் தங்கள் முதலீட்டை மேற்கொள்ளும் அவர்கள் எதிர்பார்க்கும் நன்மை தீமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தாம் முதலீடு செய்யும் நாடு குறித்து நம்பிக்கை கொள்ளக்கூடிய அரசியல் மற்றும் நிறுவன சூழல் காணப்பட வேண்டும். அந்நாட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதி நிலவ வேண்டும். அந்நாட்டில் முதலீடு செய்வதற்கு வசதியாக இருத்தல் வேண்டும். அந்நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதற்கான வாய்ப்புகள் உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும். அந்நாட்டில் வரி நிவாரணங்கள் மற்றும் பிற ஊக்குவிப்புகள் காணப்படல் வேண்டும்.

அந்நாட்டில் உள்ள பொருளாதார காரணிகள் சிறந்த மட்டத்தில் இருக்க வேண்டும். அந்நாட்டின் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குழுக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சர்வதேச மட்டத்தில் வாழக்கூடியதாக இருத்தல், அந்நாட்டின் துறைமுகம், விமான நிலையங்கள், வீதிகள், மின்சாரம், தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச மட்டத்தில் இருத்தல், சுகாதார மற்றும் கல்வி வசதிகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருத்தல் வேண்டும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலைமைகள் உயர் மட்டத்தில் இருத்தல் வேண்டும். அழகான நகர்ப்புற சூழல் இருக்க வேண்டும்.

அவ்வாறாயின், எமது நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் கடந்த அரசாங்க காலப்பகுதியில் பின்னடைவை சந்தித்திருந்தது என்பதை நாம் விருப்பமின்றியேனும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

2014 ஆம் ஆண்டில், உலக வங்கியின் ‘வணிக வசதி’ சர்வதேச தரவரிசையில் இலங்கை 85ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால் 2019 இல் இலங்கை 99ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் நாங்கள் முதலிடத்தைப் பிடித்தோம், ஆனால் 2019 இல், அது 4 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

எனவே, சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதில் நம் நாடு பின்தங்கியிருந்தது. அந்த சூழ்நிலையிலிருந்து கூடிய விரைவில் வெளியேற முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்ய, நாட்டில் முதலீட்டாளர்களை எளிதாக்குவதற்கு நாங்கள் உழைக்க வேண்டும் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் முக்கிய கூறுகளில் ஒன்றாக, நம் நாட்டின் இந்த புதிய துறைமுக நகரத்தில் எங்கள் வணிக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

மேலும், அந்த புதிய வேகத்தின் மூலம், நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பிற வசதிகளை அதிகரிக்க முடிகின்றமை இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

2006ஆம் ஆண்டு முதல் 2014 வரை 9 ஆண்டுகால காலப்பகுதியில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகம் தொடர்பில் நீங்கள் நன்கு அறிவீர்கள். அக்காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேனும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 24 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 79 பில்லியன் ஆக அதிகரிப்பதற்கு எமக்கு முடிந்தது.

எனினும், அதன் பின்னர் 2015 முதல் 2019 வரையான 5 ஆண்டுக் காலப்பகுதியில் எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 80 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 82 பில்லியன் வரையே உயர்வடைந்தது. அதனால் நம் நாட்டில் பொருளாதார நன்மைகளின் வளர்ச்சி கிட்டத்தட்ட முற்றிலும் தடைபட்டது. அந்நேரத்தில் எந்தவொரு திட்டத்தையும் தொடங்கவோ செயல்படுத்தவோ அரசாங்கம் தவறிவிட்டது.

2020ஆம் ஆண்டு நாம் மீண்டும் அரசாங்கத்தை பொறுப்பேற்ற பின்னர் முழு உலகத்தையும் ஆட்கொண்ட கொவிட் தொற்றுக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டது. நாட்டு மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க 66 நாட்களுக்கு முழு நாட்டையும் முடக்குவதற்கு எமக்கு நேர்ந்தது. முழ வணிகத்துறைக்கும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

அதன் மூலம் முழு உலகத்திலும் இடம்பெற்றது போன்று எமது நாடும் பின்னடைவை சந்தித்ததுடன், 2020ஆம் ஆண்டில் பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது. அதனால் எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 80 பில்லியனாக குறைவடைந்தது. எனினும், மக்களின் வாழ்க்கையை திருப்திகரமான அளவில் பராமரிக்க நமது அரசாங்கத்திற்கு முடிந்தது.

ஒரு நாடு என்ற ரீதியில், இந்த கடுமையான சூழ்நிலையை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு, நம் நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்ற வேண்டும். நாம் இதுவரை ஒரு இலட்சம் கிலோமீற்றர் தூரம் வரையான வீதி, அனைவருக்கும் நீர், புதிய அதிவேக நெடுஞ்சாலை என நாடு முழுவதுமன் செயற்படுத்தும் பாரிய திட்டங்கள் ஊடாக பொருளாதார ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றோம். மக்களிடையே மீண்டும் பணப் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வணிக நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுக தொழில்துறை வலயம் மூலம், புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உருவாக்கப்படும். நாடு முழுவதும், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட புதிய தொழில்துறை வலயங்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யும்போது, அது 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை தாண்டிய பாதையில் நாடு பயணிக்க வழிவகுக்கும்.

இந்த புதிய துறைமுக நகரத்தின் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நம் நாட்டிற்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை இன்று நாம் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக நிறுவுவோம்.

இதன் மூலம், கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, நம் நாட்டில் ஒரு திருப்புமுனையை நாம் ஏற்படுத்த முடியும். உலகின் சிறந்த முதலீட்டாளர்களை நம் நாட்டிற்குள் ஈர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எங்கள் அரசாங்கம் எப்போதும் மக்களுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்களின் கருத்துக்களை நாங்கள் பாராட்டுகிறோம். நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன். எனவே, இந்தச் சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இரண்டாவது வாசிப்பில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இதேவேளை, மக்களதும் நமது சகோதர கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டு, இந்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம்.

அவற்றில் ஒன்று இந்த ஆணையத்தின் கட்டமைப்பு பற்றியது. ஆணைய கட்டமைப்பில் பெரும்பான்மையான இலங்கையர்கள் இருக்க வேண்டும் என்பதை சட்டத்திலேயே உறுதிப்படுத்த எதிர்பார்க்கின்றோம். இதேவேளை, ஆணைய தலைவரும் இலங்கையராக இருக்க வேண்டும் என்ற கருத்தை சட்டத்திற்குள் நிறுவ எதிர்பார்க்கின்றோம்.

அத்தகைய திருத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் முந்தைய அரசாங்கத்தால் அறியப்படாத நியமனங்கள் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகளின் காரணத்தினாலாகும் என்பதை நாங்கள் அறிவோம். இன்று, அந்த அனுபவத்தால் நொறுங்கிய நம் மக்களின் மனதில் பெரும் பயம் இருக்கிறது. இந்த அச்சங்கள் நியாயமானவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

இதேவேளை, இந்த துறைமுக நகரத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75 சதவீதமாவது இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். இலங்கையர்களுக்கு தேவையான சிறப்புத் திறன்கள் இல்லாத சில சந்தர்ப்பங்களில், இந்த நிலையை தளர்த்த ஆணையத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நம்புகின்றோம்.

அதன்படி, இதுபோன்ற விசேட சந்தர்ப்பங்களில் இந்த நிலையை தளர்த்த அவர்களுக்கு அதிகாரம் அளித்து, ஏராளமான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், முந்தைய அரசாங்கம் இத்திட்டத்தின் மதிப்பை உணர்ந்து செயற்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் நமது அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போர்ட் சிட்டி கட்டுமானம். 2015 முதல் பல்வேறு காரணங்களால் தடைப்படினும், மந்தநிலையிலேனும், பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருந்த போதிலும், முந்தைய அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்தி வந்தமைஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அந்த நேர்மறையான செயற்பாடு காரணமாக நம் நாட்டிற்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள அனுகூலத்தின் பங்குதாரர்களாக விளங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, குறுகிய அரசியல் கோணங்களில் இருந்து நோக்காது, நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்கள் அந்த வாய்ப்பின் பலன்களை பெற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

அதன்படி, இந்த புதிய நகரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, இன்றைய எதிர்க்கட்சியிலிருந்தும் கூட, நாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்க நீங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு செய்தால், அதுவே சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் அனுப்பும் சிறந்த செய்தியாகும். அத்தகைய செய்தியின் மூலம் நம் நாட்டிற்குள ஈர்க்கப்படும் முதலீட்டின் அளவு வேகமாக அதிகரிக்கும் என்று நாம் உறுதியாகக் கூறலாம். அப்போது இத்திட்டத்தின் வெற்றியை நாம் அனைவரும் கட்சி பேதமின்றி அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின் எமது நாட்டை நேசிக்கும், நாட்டின் எதிர்கால பயணத்தை ஆசீர்வதிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி இச்சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுக்கின்றேன்” எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடடார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: