முல்லைத்தீவில் தொலைக்கல்வி நடவடிக்கை விஸ்தரிப்பு கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைக்கல்வி நடவடிக்கைகளை விஸ்தரிப்பது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் இன்று (03) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கொரோனா தொற்று காரணமாக ஸ்தம்பித்து இருக்கின்ற மாணவர்களின் நிகழ்நிலை (தொலைக்கல்வி) கற்றலை மேற்கொள்வதில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் பிரச்சினைகளை துரிதமாக நிவர்த்தி செய்து கொள்வது சம்பந்தமாகவும் மாணவர்கள் இணைய வசதிகளை பெற்றுக் கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.