இலங்கையில் கொவிட்19 பரவல் நிலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை இம்மாதம் ஜூலை 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் திகதி தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஜூலை 05 முதல் இரு வாரங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும் 14 நாட்களின் பின்னர் இம் முடிவு தொடர்பில் மீண்டும் தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மேல் மாகாணத்தில் நிலவும் கொவிட்-19 தொற்று நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து அனைத்து மாகாணங்களிலும் ஆசன எண்ணிக்கையில் 50% மட்டுப்பாடு, மேல் மாகாணத்தில் ஆசன எண்ணிக்கையில் 30% மட்டுப்பாடு, தனியார்/ வாடகை வாகனங்கள் ஆசன எண்ணிக்கையில் மட்டுப்பாடு
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அவசியத்தின் அடிப்படையிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் பேணுவதற்கும், முடியுமான வரை வீட்டிலிருந்து பணியாற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதாரப் பிரிவினரால் குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மதத் தலங்கள், சினிமா கொட்டகைகள், கெசினோ, பார்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், ஆடையகங்களில் ஒதே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதியோர், சிறுவர் இல்லங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றிற்கு விருந்தினர்கள வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகங்களை திறக்க அனுமதியில்லை. திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட வீடுகளில் மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதியில்லை.