செல்ஃபோன் சிக்னலுக்கு மரத்தில் ஏறி ஆபத்தான முறையில் கற்கும் மாணவர்கள்
இந்தியா – தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதிகப்படியான மாணவர்கள் செல்ஃபோன் மூலமாகவே ஆன்லைன் கல்வி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செல்ஃபோன் டவர் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெரியகோம்பை, பஞ்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அப்பகுதிகளில் போதிய அளவில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காததால் செல்ஃபோன் சிக்னலுக்காக ஊரில் உள்ள ஆலமரங்களில் ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் பாடம் கற்று வருகின்றனர். தங்களது கிராமத்திற்கு செல்ஃபோன் டவர் அமைத்து தருமாறு மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமும் வகுப்பிற்கு வர வேண்டியிருக்கிறது, மழை நேரங்களில் பயமாக இருக்கிறது. செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத காரணங்களால் ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்ய முடியவில்லை, அப்படி அட்டென்ட் செய்யமுடியாத நிலையில் வருகை பதிவேடு பாழாகிறது. வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அதனால் செல்ஃபோன் டவர் அமைத்துக் கொடுத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர் கிராமப்புற மாணவர்கள்(நக்கீரன்)