crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு வழக்கிலிருந்து 4ஆவது நீதியரசர் விலகல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சி.ஐ.டி. யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து, தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி, உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளிலிருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

இவ்வழக்கு விசாரணைகளிலிருந்து இன்று (05)  ஒதுங்கிக் கொள்வதாக, 4ஆவது நீதியரசராக மஹிந்த சமயவர்தன அறிவித்துள்ளார். இதனையடுத்து பரிசீலனைகள் மீள ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அவ்வாணைக்குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதனடிப்படையில், இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா, கடந்த மே 28ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட காரணிகள் என தெரிவித்து நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, கடந்த ஜூன் 4 ஆம் திகதி மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகியுள்ளார்.

அத்துடன், கடந்த ஜூன் 23 ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறி, நீதியரசர் எ.எச் எம் டி நவாஸ் விலகினார்.

இவ்வாறான பின்னணியிலேயே, அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், உயர் நீதிமன்றில், நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (05) பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே, இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில், நீதியரசர் மஹிந்த சமயவர்தன அறிவித்தார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 152/2021 எனும் மனு பரிசீலனையின் , சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம் சஹீத், ருஸ்தி ஹபீப் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 85 = 94

Back to top button
error: