சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாற்றம்
இந்திய அரசு தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தான் குறிப்பிட்ட அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற நிறுவனம் மாதம்தோறும் 100 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனீகா கொரோனா தடுப்பூசியை, அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.
ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மிக அதிகமாக இருப்பதால், இந்திய அரசு தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும், கடந்த செவ்வாய்க்கிழமை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரிட்டன் நாட்டுக்கு அனுப்ப வேண்டிய ஐந்து மில்லியன் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி சரக்குகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தியது.
கடந்த மார்ச் மாத மத்தியில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவின் இந்த திடீர் முடிவால் ஆஸ்ட்ராசெனீகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை நம்பியிருந்த பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் எப்போது மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும், ஏற்கனவே குறிப்பிட்ட காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுப்பதாக சொல்லியிருந்த ஒப்பந்தங்களை இந்தியா எப்படி நிறைவேற்றும் என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 93 சதவீதம் சரிந்து இருப்பதாக இந்தியாவின் மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது. முன்பு சுமார் 28 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது இது வெறும் இரண்டு மில்லியன் டோஸ்ளாக குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையத் தொடங்கின.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியதுமே, உலகம் முழுக்க அப்பிரச்னை எதிரொலிக்கத் தொடங்கியது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஏற்றுமதித் தடையால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவேக்ஸ் திட்டத்தை நிர்வகிக்கும் கவி என்கிற தடுப்பூசி கூட்டமைப்பு, இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி தடை இருப்பதால் தன் விநியோகத்தை அதிகரிக்க வேறு நாடுகளை பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, அதிகாரத்தில் இருப்பவர்கள், அமைச்சர்கள் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தன்னை அச்சுறுத்துவதாகவும் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை தங்களுக்கு விநியோகிக்குமாறும் கட்டாயப்படுத்துவதாகம் தெரிவித்திருந்தார்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் மீது உலகின் பல நாட்டு அரசாங்கங்களும், தாங்கள் குறிப்பிட்டபடி கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை அனுப்பவில்லை என வழக்கு தொடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியது.(பிபிசி)