இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு இலங்கை வருவோரிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதியான பின்னர் தனிமைப்படுத்தல் இன்றி அவர்கள் விடுவிக்கப்படுவர்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டு இலங்கை வரும் வெளிநாட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என இலங்கை சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இலங்கையின் சுவாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களின் பின்னர் இலங்கைக்குப் பிரவேசிக்கும் நபர்களுக்கே தனிமைப்படுத்தல் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்று இலங்கை வருவோரிடம் விமான நிலையத்தில் பி.சீ.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தனிமைப்படுத்தல் இன்றி அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எனினும், பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
– இலங்கை வரும் அனைவரும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர். பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாகும்.
-கொவிட் தடுப்பூசி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
– தடுப்பூசி பெறாதவர்கள், பீ.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
– இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பீ.சீ.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
– இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்க, தென் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பயணத் தடை தொடர்கிறது. இந்த நாடுகளின் ஊடாக ட்ரான்சிட் பயணம் செய்வோருக்கும் இலங்கைக்குள் வருவதற்கு அமுலில் உள்ள தற்காலிகத் தடை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
– இராஜதந்திர அதிகாரிகள், ஐ.நா. அதிகாரிகள், ஐ.நா. முகவர் நிலைய அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட அதிகாரிகள், இராஜதந்திர கடவுச்சீட்டு உடையவர்கள் ஆகியோர் வீடுகளில் தனிமைப்படுத்தல் நடைமுறையை பின்பற்றலாம்.