ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் பெசில் ராஜபக்ஷ அவர்கள், இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, நிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்களின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பெசில் ராஜபக்ஷ அவர்களைப் பாராளுமன்ற உறுப்பினராகதை் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
பெசில் ராஜபக்ஷ அவர்கள், 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பெசில் ராஜபக்ஷ அவர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.
கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்த பெசில் ராஜபக்ஷ அவர்கள், கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.
பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பெசில் ராஜபக்ஷ உள்ளார்.
இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.