இலங்கையில் சீரற்ற காலநிலையால் 2894 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்மேடொன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயங்களுக்கு உள்ளானார்கள். வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 327 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்ததால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களனி, களுகங்கை, ஜின் கங்கை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
நெலுவ – லங்காகம பிரதேசத்தில் நேற்று காலை 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் தாழ் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நெலுவ – மாவிட்ட பிரதான பிரதான வீதியிலும், தவளம என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெலிவிற்றிய – திவிதுறு, பத்தேகம, கொட்டபொல – நெலுவ – நாகொட, எல்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் நிலை இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. களனிகங்கையிலும் நீர்மட்;டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இராணுவத்தினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.