மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கையில் மேலும்
“இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,
வடக்கு, வட மத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.