அரச மற்றும் அரை அரச பணியார்களினால், கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் அரை அரச பணியார்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய தொடர்புடைய சட்ட வரைவுகளைத் தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டு, குழுவின் பரிந்துரைகளை ஒரு மாத காலப்பகுதிக்குள் வழங்குமாறு பிரதமர் பணித்தார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு நிவாரணமளிப்பதன் நோக்கம் குறித்து பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் அவர்கள் விளக்கமளித்தார்.
2019 நவம்பர் 27 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் -சட்ட வரைஞர் திருமதி. தில்ருக்ஷி சமரவீர அவர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் திருமதி.விவேகா சிறிவர்தன ஆகியோர் இதன்போது தெளிவுபடுத்தினர்.
அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால் நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய நிறுவனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைப் ஒன்று அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக –
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச ஊழியர்கள் முகங்கொடுக்க நேரிட்ட பிரச்சினைகள் தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் திரு.எம். எம். பீ. கே.மாயாதுன்னே அவர்கள் விளக்கமளித்தார்.
கலந்துரையாடலில் பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கனேஷ் தர்மவர்தன, மேலதிக செயலாளர் (சட்டம்) சந்திரா ஜயதிலக, ஜனாபதிபதி பணிப்பாளர் நாயகம் (சட்டம்) ஹரிகுப்த ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.