இந்தியா – மாலைதீவு – இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படையினர் கலந்துகொண்ட 2021க்கான மெய்நிகர் முத்தரப்பு பயிற்சி செயலமர்வு (Virtual Trilateral Table Top Exercise -TTX) 2021 ஜூலை 14-15 ஆகிய திகதிகளில் நடைபெற்றுள்ளன.
இந்திய கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய CSO (Ops) ரியர் அட்மிரல் குர்சரண் சிங், இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பி.எஸ்.மஹாவிதான மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையின் கேணல் ஹில்மி உள்ளிட்ட சிரேஸ்ட பிரதிநிதிகள் 14ஆம் திகதி ஜூலை நடைபெற்ற TTX-2021 பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். மும்பையில் உள்ள கடல்சார் போர்முனை மையத்தினால் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
டி.டி.எக்ஸ் -2021 பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தில் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பொதுவான நாடுகடந்த கடல்சார் குற்றங்களை எதிர்ப்பதற்கான சிறந்த செயற்பாடுகள் / நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதையும் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஆகியவற்றில் உதவிகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின்போது முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான ஒபரேஷன்சாகர்ஆரக்ஷா2 இன் அனுபவத்தில் இந்த பயிற்சி கூடுதல் கவனத்தை பெறுகிறது. TTX போன்ற தொடர்ச்சியான ஈடுபாடுகளின் அடிப்படையில் பொதுவான நியமங்கள் கட்டளைகளை உருவாக்குவதற்கான வலுவான ஒத்துழைப்பினை கடற்படையினரிடையில் பெறமுடிகின்றது.
கடந்த ஆண்டுகளில் கடல் ரீதியாக இந்தியா மாலைதீவு இலங்கை ஆகிய நாடுகளிடையில் ஏற்பட்டிருக்கும் ஆழமான முத்தரப்பு ஈடுபாட்டினை இது மேலும் வலுவாக்குகின்றது. பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் என்ற இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இந்து சமுத்திரத்திலுள்ள மூன்று அயல் நாடுகளிடையிலான தொடர்புகள் அண்மைய வருடங்களில் அதிகரித்துள்ளன.
கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாட்டின்போது இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாக இந்தியா இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளிடையில் இணக்கம் காணப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும்.
இம்மாநாட்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு செயலர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ண மற்றும் மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா டீடி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் சிசெல்ஸ் மற்றும் மொரீசியசை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் மெய்நிகர் மார்க்கமூடாகவும் கலந்து கொண்டிருந்தனர்.