சவுதி – மக்கா, மதினாவில் இராணுவத்தில் பெண் பாதுகாவலர்கள் பணியில்
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான். இவர், தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார். பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என அவர் நம்புகிறார். அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார்.
அந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.
மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். ராணுவத்தின் காக்கி நிற சீருடை தான் அவர் அணிந்திருந்தார். ஆனால், அவரின் மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி என்று மோனா காட்சியளித்தார்.
மோனா அளித்தப் பேட்டியில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.
காபா என்ற புனித இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரான சமர், “நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று எனது குடும்பத்தினரே ஊக்குவித்தனர். உளவியல் பயின்ற நான், குடும்பத்தினர் ஊக்குவித்ததால் ராணுவத்தில் சேர்ந்தேன்” என்றார்.(இந்து)