சீனாவில் கன மழை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் பலி
மத்திய சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர்.
ஹெனான் மாகாணம் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை தீவிரமாக இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஜெங்ஜோ மாகாணத்தில் மட்டும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுட்தப்பட்டுள்ளனர். ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை அங்கு மூன்றே நாட்களில் பெய்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய சீனாவில் கனமழை பெய்துள்ளது. நேற்று முன் தினம் ஜெங்ஜோ மெட்ரோ ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததில் 12 பேர் பலியாகினர் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை உறையச் செய்தது.
கோங்கி நகரில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். சீனாவின் சமூக வலைதளமான வெய்போவில் மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் வேண்டி குரல் எழுப்பி வருகின்றனர்.
ஹெனான் மாகாணத்தில் வெள்ளம் அபாய அளவையும் தாண்டிவிட்டதால் அங்கு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சில கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. ஹெனான் மாகாணத்தின் சில நீர்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தாலேயே சீனாவில் மோசமான அளவு மழை வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கின்றனர்.
ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(இந்து)