முல்லைத்தீவில் சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாட்டில் அதிகரித்து செல்லும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்திற்கு எதிராக இன்று (22) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றுள்ளது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியே இவ்வாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே!, சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
கவனயீர்ப்பு நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினை சேர்ந்த பெண்கள், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.