வட மாகாணத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற சினோபாம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 200000 , வவுனியா மாவட்டத்திற்கு 75000, மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50000 தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் (28) தெரிவித்தார்
“இந் நான்கு மாவட்டங்களிலும் இத்தடுப்பூசியானது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3 ஆம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
யாழ். மாவட்டத்தில் யூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று முதல் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் வெளியிடப்படும்.
இத் தடுப்பூசியானது முதல் நாள் யூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை 30 வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
யாழ் மாவட்டத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு அவர்களது வதிவிடம் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் வழங்கப்படும். இவர்கள் தமது ஆசிரிய பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசியானது 30 ஆம் திகதி யூலை இரண்டாம் நாள் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் தமது பிரிவிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு தமக்கான தடுப்பூசி வழங்கும் நேரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி வழங்கப்படும். இத் தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் யூலை மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக
பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நோயளர்களின் விபரங்களை அவர்களை பராமரிப்பவர்கள் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும்.” எனவும் வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.