டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன.என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெங்கு வைரஸ் வகை 01 நாட்டில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம், மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு வைரஸ் பிறழ்வு தொடர்பான ஆய்வு பிரிவு ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் நோக்கம் நாட்டில் பரவும் டெங்கு வைரஸின் வகைகளை அடையாளம் காண்பதாகும். அத்துடன், இவ்வாறு பரவுகின்ற டெங்கு வைரஸ் வகைகளில் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையிலும் 16,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 70 வீதமானோர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிமாலி ஹேரத் இதுகுறித்து குறிப்பிட்டார்.
தற்போது, நாட்டின் பல மாவட்டங்கள் டெங்கு அனர்த்த வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன, நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்னபுரி, கேகாலை, காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.