மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்; சி.ஐ.டி தடுப்புக்காவலுக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை!
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தன்னை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து, சி.ஐ.டி. யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து, 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 17 மற்றும் 126 வது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி சங்கரி தவராசா ஊடாக, அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் (18) தாக்கல் செய்துள்ளார்.
சி.ஐ.டி. யின் விசேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி.குமாரசிங்க, சி.ஐ.டி. யின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்ப்ட்டுள்ளனர்.
மனுதாரரான தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியின் தலைவர் எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் எந்த அடிப்படைகளும் இன்றி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரரான ரிஷாட் எம்.பி, தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், சி.ஐ.டி.யில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்டஈட்டை பிரதிவாதிகளிடம் இருந்து பெற்றுத் தருமாறும் அவர், தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றை கோரியுள்ளார்.