பிரிட்டன் அரசு இந்தியாவை ரெட் லிஸ்ட்டிருந்து நீக்கம்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ரெட் லிஸ்ட்டில் வைத்திருந்த பிரிட்டன் அரசு அதை இன்று (08) முதல் நீக்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி அதற்குரிய சான்று வைத்திருந்தால், 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மாறாக, தாங்கள் தங்க இருக்கும் வீடுகளில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்கும், விமானம் இயக்குவதற்கும் பிரிட்டன் அரசு தடை விதித்தது.
இரு நாடு அரசுகளுக்கு இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவை மட்டும் இருந்துவந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து, இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் இருந்து பிரிட்டன் அரசு நீக்கியுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
”இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் ரெஸ் லிஸ்ட் பட்டியலில் இருந்து 8-ம் தேதி அதிகாலை முதல் நீக்கப்படுகிறார்கள். இதன்படி இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரும் பயணிகள் இரு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தி இருந்தால் அவர்கள் 10 நாட்கள் ஹோட்டல் தனிமைக்குச் செல்லத் தேவையில்லை.
மாறாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், தாங்கள் தங்க இருக்கும் இடத்தில் 10 நாட்கள் தனிமைக்குச் செல்லலாம். அங்கு 2-வது நாளிலும், 8-வது நாளுக்குப் பின்பும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.
அதேசமயம், பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தியவர்கள், ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி பிரிட்டனுக்கு வந்தால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கு நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம். பிரிட்டன் அங்கீகரிக்காத தடுப்பூசிகளைச் செலுத்தியவர்களை அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்.
பிரிட்டனுக்கு வரும் பயணிகள் புறப்படுவதற்கு முன் கண்டிப்பாக கரோனா பரிசோதனை எடுத்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது புக் இன் அட்வான்ஸ் செய்தால் இரு நாட்களுக்கு முன் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
பிரிட்டனில் இரு தடுப்பூசியைச் செலுத்தியவர்கள், வெளிநாடுகளில் பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள், 18 வயதுக்குக் கீழ்பட்டவர்கள், பிரிட்டனில் வசிப்பவர்கள், பிரிட்டனால் அங்கீகரிக்ககப்பட்ட தடுப்பூசியை வெளிநாடுகளில் செலுத்தி பிரிட்டன் வருபவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(இந்து)