இலங்கையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, ரோஹண திஸாநாயக்க, திலிப் வெதாரச்சி ஆகியோர் தற்போது கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பாராளுமன்ற வளாகங்களிலான சி சி டிவி ( CCTV) காட்சிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சோதனையிடப்பட்டு வருகின்றது.
அதற்கமய, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் கடந்த வாரம் பாராளுமன்றத்தின் எந்த அமர்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்க கடந்த வாரம் ஒரு நாள் மாத்திரமே பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ள நிலையில், சி சி டிவி ( CCTV) ஆய்வில் அவருக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு அவதானிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சி கடந்த வாரம் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்துள்ளதோடு, அவரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்களுடன் நெருங்கிய தொர்பினை பேணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், தொடர்ந்தும் சி சி டிவி ( CCTV) தொகுதியில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.