இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் திகதி 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சேவைகளை வழங்குதல் மற்றும் பெறுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
0112677877 எனும் தொலைபேசி வழியாக, முற்பதிவை மேற்கொண்டு மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளைப் பெறுவதற்கான வசதி இரத்துச் செய்யப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து சேவைகளையும் மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், காலாவதியாகும் தினத்திலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக கடந்த மே மாதம், திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.