இலங்கை – கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர், டாக்டர் ஆதிரா எஸ். அவர்கள், மத்திய மாகாண ஆளுநர் திரு லலித் யூ. கமகே அவர்களை இன்று (12) அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
ஆளுநர் அவர்கள், டாக்டர் ஆதிரா அவர்களை கண்டிக்கு வரவேற்றதுடன் மத்திய மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தனது பாராட்டினை தெரிவித்தார்.
அத்துடன் இந்திய வீட்டு திட்டம் மற்றும் பல்லேகெலே SIBAவில் நிறுவப்படும் கண்டிய நடன கலைக்கூடத்தினது முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக்காட்டினார். இந்த கோவிட் காலத்தில் சுவசேரிய அவசர ஆம்புலன்ஸ் சேவையினை பாராட்டியதுடன், இந்திய இலங்கை உறவை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதன் நல்லெண்ணத்தை ஆளுநர் தெரிவித்தார்.
1990 ஆம்புலன்ஸ் சேவையானது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தல்களுடன் இந்திய மக்களால் அரசாங்கங்களுக்கிடையிலான மானியம் அடிப்படையில் அமெரிக்க டொலர் 22.5 மில்லியன் பெறுமதிக்கு 2017ல் பரிசாக வழங்கப்பட்டது. இப்போது இலங்கை சுகாதார துறையின் வெற்றிகரமான முயற்சியாக அது செயல்படுகிறது.
உதவி இந்திய உயர்ஸ்தானிகர் தனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் ஆளுநருக்கு தெரிவித்ததுடன் தற்போதைய தொற்று நோய் நிலைமை பற்றி கலந்துரையாடினார். அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்ப்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார்.