ஆப்கானிஸ்தான் – காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடக்கலாம் என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (15) மாலை காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த தூதர் உள்பட அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக விமான நிலைய வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அந்த வளாகத்திலேயே தற்காலிகமாக தூதரகம் செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது காபூல் விமான நிலைய பாதுகாப்பை நேட்டோ கூட்டுப்படையினர் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று இரவு விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய வளாகத்துக்குள் சில விமான நிறுவனங்களின் ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து தாயகத்துக்கு திரும்ப முற்படுவோருக்கு உதவியாக தமது படையினர் விமான நிலையத்தில் இருப்பதாக நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.(பிபிசி)