ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஐக்கிய அரபு எமீரகத்தில் அடைக்கலம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து வெளியேறிய அதிபர் அஷ்ரப் கானிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்பு கொடுத்துள்ளதாக ஐக்கிய அரபு எமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமீரகத்தின் வெளியுறவு விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். அதற்கு முன்னதாக அஷ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது ஐக்கிய அரபு எமீரகத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது.
தான் ஏன் நாட்டைவிட்டு வெளியேறினேன் என்பது குறித்து அஷ்ரப் கனி, தலிபான்களுடன் மோதலைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு அமைதியை உறுதி செய்யவே தான் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.(இந்து)