crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரிவில் குடிநீர் விநியோகம் செயலிழப்பு

குடிநீர் விநியோகத்தினை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கு மாகாண சபையினால் கடந்த 2017ம் ஆண்டு பல மில்லியன் ரூபா செலவில் நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.

குறித்த நீர்த்தாங்கியின் மூலம் அப்பகுதியிலுள்ள சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்ட குறித்த நீர் விநியோக திட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் 2017ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிறேமகாந்தனிடம் குறித்த திட்டம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட சிறிது காலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்ற போதிலும், 6 மாதங்களிற்கு பின்னர் அத்திட்டம் செயலிழந்து போனது. மக்களின் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு செயலிழந்து காட்சிப் பொருளாகவே காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அலைந்து திரிவதுடன், பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த நீர் விநியோக திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் கிருசாந்தனிடம் வினவியபோது “குறித்த திட்டம் தமது கண்காணிப்பின் கீழ்தான் இடம்பெற்றதாகவும், பின் பிரதேசத்தின் சனசமூக நிலையத்திடம் குறித்த திட்டம் கையளிக்கப்பட்டதாகவும், ஆனாலும் நீர் விநியோகம் இடம்பெறுவதாகவும்” அவர் தெரிவித்தார்.

ஆனாலும், கடந்த வருடங்களில் இடையிடையே ஒரு மணி நேரம் குடி நீர் விநியோகம் இடம்பெற்றதாகவும், கடந்த வருடத்திலிருந்து இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர் விநியோகம் இடம்பெறவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வே்ணடும் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 2

Back to top button
error: