மட்டக்களப்பில் வியாபார நிலையங்களை பூட்டுவதற்கு தீர்மானம் – வர்த்தக சங்கம்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 20.08.2021 திகதி முதல் எதிர்வரும் 29 திகதி வரை வியாபார நிலையங்களை பூட்டுவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று (19) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் செல்வராசா கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கொவிட் 19 கொடிய நோயின் தாக்கத்தினால் மட்டக்களப்பு சமூகமும் மிகவும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது இதனை முன்னிட்டே எமது சங்கம் இந்த முடிவினை எட்டியுள்ளது.
அதேபோன்று வர்த்தகர்களின் இந்த முடிவிற்கு இணங்க வாடிக்கையாளர்களும் செயற்படவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், வாடிக்கையாளர்கள் வர்த்தக நிலையங்களிற்கும் வரும்போதும் வர்த்தகர்களுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுகின்றது, தற்போதைய நிலையில் அந்த தொடர்பின் மூலம் கொரோனாத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதன் காரணமாகத்தான் எமது சமூகத்தின் நலன் கருதியும் வர்த்தகர்களின் நலன் கருதியும் இந்த முடிவை எமது சங்கம் எடுத்துள்ளது.
பலசரக்குக் கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள், பழக்கடைகள் மற்றும் பேக்கரிகள், உணவகங்கள் (அமர்ந்திருந்து உண்பதற்கு தடை) போன்ற அன்றாட அத்தியாவசிய கடைகள் மாத்திரம் மக்களின் தேவை கருதி அவற்றிற்கு மாத்திரம் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் வீடுகளில் இருந்து ஒருவரை மட்டும் வெளியில் அனுப்பி அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் எமது மாவட்டத்தை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எமது சங்கத்தின் ஒரே குறிக்கோள், அதனாலேயே இந்த முடிவை எமது அனைத்து வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் ஏற்று எமது மக்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென” இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்