முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb176-1-720x470.jpg)
“அனைவருக்கும் தடுப்பூசி” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு வீடு சென்றே தடுப்பூசி செலுத்தும் நடமாடும் சேவை வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(23) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்குரியதாக கிளிநொச்சியில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இவ் நடமாடும் சேவை நேற்று (23) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று முறிப்பு, பாலைப்பாணி, வன்னிவிளாங்குளம் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
இராணுவத்தினரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து மேற்கொள்ளும் குறித்த வேலைத்திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறவுள்ளதாகவும், அதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு இடங்களில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிலையங்கள் செயற்படுகின்றன. மல்லாவி பிரதேசத்தில் நடமாடும் சேவையாகவும் இதனைவிட முள்ளியவளை நீராவிப்பிட்டி சிகிச்சை நிலையம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.