
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (24) காலமானார்.
கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி மேற்கொண்ட பிசிஆர் (PCR) பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் அவர் மரணமடைந்ததாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் வதந்தி பரவி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவிருந்த அவர், தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து தேர்தலிலிருந்து போட்டியிடுவதிலிருந்தும் தவிர்ந்து கொண்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் (2015 – 2017) அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சராகவும் (2017 – 2019) பதவி வகித்திருந்ததோடு, அதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரின் காலத்திலும் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்ற அவர், இலண்டனிலுள்ள St. Martin’s School of Art இல் துணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் BA பட்டத்தை பெற்றார்.
மங்கள சமரவீர 1989ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும் போது வயது 65 ஆகும்.