ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல்

ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இதுவரை அங்கு ஆட்சி அமைப்பதில் தீர்வு எட்டப்படவில்லை. தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குறைந்தது ஒரு கோடி குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்குக் காத்திருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அங்கு லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் செயல்பாட்டு இயக்குநரான டேவிட் பெஸ்லி கூறுகையில், “ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவீதம் பேர், அதாவது 1.4 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக அங்கே வறட்சி, உள்நாட்டு கிளர்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியன நிலவி வருகின்றன. இத்துடன் அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பரவலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
போர், இயற்கை சீற்றம் எதுவானாலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களுமாகத் தான் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானும் அதற்கு விதிவிலக்கில்லை என்ற நிலையில் இப்போது அங்கு குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பல்வேறு நாடுகளும் முதலீடு செய்திருந்தன. சர்வதேச அமைப்புகளும் முதலீடு செய்திருந்தன. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரம் தலிபான்கள்வசம் சென்றுள்ளதால் உலகவங்கி உதவிகளை நிறுத்தியுள்ளது. 2002 தொடங்கி இதுவரை உலகவங்கி ஆப்கனுக்கு 5.3 பில்லியன் டாலர் வரை வழங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச நிதியமும் அது அளித்துவந்த பல்வேறு உதவிகளை நிறுத்திவிட்டது.
ஆகஸ்ட் 14 ஆம் தொடங்கி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டவர், உள்நாட்டவர் என மொத்தம் 70,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.(இந்து)