“கேரளா முற்போக்கான மாநிலம். 95 சதவீத மக்கள் மதச்சார்பின்மையைப் பின்பற்றக்கூடியவர்கள்.” – எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன்
சங்பரிவார் அமைப்புகள் கேரள மக்களிடையே மதவாதத்தைப் புகுத்த முயன்றன
இந்தியா – கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்ததைவிட, மதவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குதான் முன்னுரிமை அளித்தோம். மதவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று கேரளாவின் புதிய எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான வி.டி.சதீஷன் தெரிவித்தார்.
எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வி.டி.சதீஷன் 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் சதீஷன் இருந்து வருகிறார்.
கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதலாவை இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைமை நியமிக்கவில்லை. அவருக்கு பதிலாக புதிய எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது
”என்னை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸ் தலைவருக்கும், ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், யுடிஎப் கூட்டணியும் இக்கட்டான சூழலில் இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கிறேன்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தோம். ஒட்டுமொத்த காங்கிரஸ், யுடிஎப் கூட்டணியும் மாற்றம் வேண்டும் எனக் கோரியது. ஆனால், நாங்கள் தற்போதுள்ள தலைமையைக் குறைகூறவில்லை.
எங்கள் தலைமையிடமிருந்து ஒத்துழைப்பையும், ஆசியையும் மட்டும் எதிர்பார்க்கிறோம். இது சவாலான காலகட்டம். யாரெல்லாம் கட்சியினரின் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் செயல்பட்டார்களோ அவர்களை மாற்றப் போகிறோம். நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்கப்போகிறோம். மீண்டும் நாங்கள் மின்னலாகப் பளிச்சிட்டு வருவோம்.
எங்களின் முதல் திட்டம் என்பது தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல. மாநிலத்தில் மதவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான். அதைச் செய்துவிட்டோம். கேரளா முற்போக்கான மாநிலம். 95 சதவீத மக்கள் மதச்சார்பின்மையைப் பின்பற்றக்கூடியவர்கள். சில சக்திகள் குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், கேரள மக்களிடையே மதவாதத்தைப் புகுத்த முயன்றன. கேரள மக்களிடையே புகுந்துள்ள மதவாதத்ததுக்கு முடிவு கட்ட எண்ணினோம். அதற்காகப் போராடினோம். மதவாதத்தை எதிர்த்துப் போரிட்டோம். கேரளாவில் மதவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம்”. இவ்வாறு சதீஷன் தெரிவித்தார்.(இந்து)