குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் தவறான தொடர்பில் இருந்த நபரும் கைது
இந்தியா – விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையைத் தாய் கொடூரமாகத் தாக்கியது தொடர்பான வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தற்பொழுது அந்த பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரைச் சேர்ந்த துளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனத்தைப் பெற்றது.
இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாட்டால் கணவன் வடிவழகனைப் பிரிந்து தவறான தொடர்பில் ஒருவருடன் இருந்த துளசிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், முதல் குழந்தை தாய் துளசி போன்றும், இரண்டாவது குழந்தை தந்தை வடிவழகனை போன்றும் இருந்துள்ளது.
துளசியுடன் தவறான தொடர்பில் இருந்த நபர் வடிவழகன் சாடையில் இருக்கும் குழந்தையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்புமாறு கூற, துளசியும் கொஞ்சம் கூட பாசமின்றி குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தில் துளசியுடன் தவறான தொடர்பில் இருந்த நபர் பிரேம்குமார் என்றுக் கூறப்பட்ட நிலையில் மணிகண்டன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வடிவழகன்-துளசி தம்பதியினர் சென்னையில் குடியிருந்த நேரத்தில் மணிகண்டன் என்பவருடன் ஏற்பட்ட துளசிக்கு தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து வடிவழகன் விழுப்புரம் குடிபெயர்ந்த நிலையில் வடிவழகன்-துளசி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு துளசி சென்றுவிட்டார். அங்கு செல்போன் மூலம் மீண்டும் மணிகண்டனிடம் துளசி பேசிவந்துள்ளார். இந்நிலையில் சித்தூர் சென்ற வடிவழகன் மனைவி துளசியின் செல்போனை எடுத்துக்கொண்டு குழந்தையையும் சொந்த ஊருக்கு கூட்டிவந்த நிலையில் அந்த செல்போனில் குழந்தையை துளசி கொடூரமாகத் தாக்கும் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி கண்டனங்களைப் பெற்றது. இறுதியில் கடந்த 29 ஆம் தேதி குழந்தையைத் தாக்கிய துளசி சித்தூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு மனநல பிரச்சனைகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனை போலீசார் தேடிவந்த நிலையில் பிரேம்குமார் (எ) மணிகண்டனை (31) புதுக்கோட்டை அறந்தாங்கி பாலன் நகரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். (நக்கீரன்)