இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டதும் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இன்று முதல் மாவட்ட அளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக சுகாதார அமைச்சர் கலாநநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரச சேவைகள் ஒன்றிணைந்த தாதியர்கள் சங்கத்துடன் இன்று (02) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கொவிட் பரவலைத் தடுக்கும் செயல்பாட்டில் முன்னணியில் நின்று செயற்படும் துறையிலுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய 20-30 வயதினருக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இது தவிர ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு அமைய, குறித்த வயதெல்லைக்குட்பட்ட 3.7 மில்லியன் பேர் காணப்படுவதோடு, அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
‘கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி’ எனும் வகையில், கிடைக்கும் எந்தவொரு தடுப்பூசியையும் விரைவில் பெறுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் அச்சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.இதன்போது 18 அம்சங்களைக் கொண்ட கடிதமொன்றும் சங்கத்தால் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.