இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதித்து சபையில் அனுமதிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 02வது பிரிவினால் அதிமேதகு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த அவசர கால சட்ட ஒழுங்கு விதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் தற்பொழுது நிலவும் கொவிட்19 சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு அடுத்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை 06 மற்றும் 07ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக மாத்திரம் ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த கேள்விகளைப் பிறிதொரு தினத்தில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 11.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக் குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.