அமெரிக்காவில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று, கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம்
வருடாந்தம் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு, 420 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற வகை பாக்டீரியா தொற்று பரவி வருவதால் தாங்கள் வளர்க்கும் கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 43 மாகாணங்களில் இந்த வகை தொற்றால் 163 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சுகாதார அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தொற்று கோழிகளிடமிருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பறவைகளை முத்தமிடுவதையோ அல்லது தடவிக் கொடுப்பதையோ தவிருங்கள், அது உங்கள் வாய்க்குள் கிருமியை பரப்பி உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கோழி அல்லது வாத்துப் பண்ணைகளிலிருந்து இந்த பாக்டீரியா பரவுவதாகவும், பறவைகள் சுத்தமாக காணப்பட்டாலும் கிருமி பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது பறவைகள் உலாவும் மற்றும் வாழும் இடங்களில் எளிதில் பரவும் ஆபத்துடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். பலர் சிகிச்சை இல்லாமலும் குணமடைந்துவிடுவர் ஆனால் இந்த தொற்று தீவிரமாகத் தாக்கப்பட்டால் இறப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
அமெரிக்காவில் இந்த தொற்றால் ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 420 பேர் உயிரிழக்கின்றனர்.(பிபிசி)