ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் தலைவராக முல்லா பராதர் தேர்வு
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தலிபான் தீவிரவாதிகள் இரண்டு வாரங்களுக்கு முன் கைப்பற்றினர். புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் தலைவராக முல்லா பராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை முல்லா பராதர்வழி நடத்துவார் என்று தலிபான்கள் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலிபான் தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான மறைந்த முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அச்சத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்கள் மீது மத ரீதியாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இது தொடர்பாக சந்தேகம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அமெரிக்கா உட்பட உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.(இந்து)