இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் கொவிட் பரவல் பட்டியலில் சிவப்பு வலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வைத்தியர்கள்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்
வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேலும் கூறுகையில்
“நாட்டில் வேகமாக டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க கொவிட் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இலங்கை இன்னமும் கொவிட் -19வைரஸ் அச்சுறுத்தல் நாடுகளின் பட்டியலில் பிரதான இடத்தில் உள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுகின்றது. நாளாந்த மரணங்கள், வைரஸ்தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பவற்றை அவதானிக்கும் போது இன்னமும் இலங்கை சிவப்புவலையத்திலேயே உள்ளது.
இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 950க்கு குறைவாக பதிவாக வேண்டும். அதேபோல் கொவிட் மரணங்களும் 2.5 வீதத்திற்கு குறைவாக பதிவாக வேண்டும். அவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் மட்டுமே பாதுகாப்பானசூழல் நாட்டில் உள்ளதென அறிவிக்க முடியும்.
ஆகவே தான் தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் பரவல்நிலைமையை அடுத்தும், புதிய வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளை அடுத்தும் மேலும் இரு வாரகாலம் நாட்டை முடக்கி வைரஸ் பரவலை தடுக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
ஆகவே மேலும் ஒரு வாரகாலம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேட்கின்றோம். இப்போதுள்ள நிலையில் நாட்டை முடக்குவதே இருக்கும் ஒரே தீர்வாகும்.
நாட்டைவழமைபோன்று செயற்பட அனுமதித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் ஊரடங்கு என அறிவித்து விட்டு மக்களின் நடமாட்டத்திற்கு இடமளிக்காது சுகாதார வழிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.
அதேபோல் மீண்டும் நாடு திறக்கப்பட முன்னர் பல்வேறு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் போது புதிய சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்