
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (07) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதிச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நிதிச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்புக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்கள் இன்றியும், வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டது.
அத்திவாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம், மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி (கட்டளைச்) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்கு விதிகள் என்பனவும் இன்று பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டன.