பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் கீழ் பிரதிநிதிகளின் தெரிவு 65 வீதம் தொகுதி வாரி முறையிலும் 25 வீதம் விகிதாசார முறையிலும் அமைய வேண்டும் என்றும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று (07) தெரிவித்தது.
தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி முன்மொழிந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 25 வீதம் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குழு முன்னிலையில் தெரிவித்தது. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடிய இவ்விசேட குழு முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, பாராளுமன்றமானது இலங்கையின் பல்வேறு தேர்தல் தொகுதிகளை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக அமைய வேண்டும் என்றார்.
இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் அல்லது வேறு நாட்டில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட, தொடர்புகளைக் கொண்டுள்ள நபர்கள் இலங்கையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது வரையறுக்கப்பட வேண்டும் அல்லது தடுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி விசேட குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியது.
தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் கூட்டமைவு இருக்க வேண்டும் என்றும், இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களினால் மற்றும் தேசியப் பட்டியலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.
பொதுத் தேர்தலின்போது கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சித் தாவல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதுடன், ஒரு உறுப்பினர் தனது கட்சியிலிருந்து மாறினால் அவர் அல்லது அவர்கள் கட்சியின் பட்டியலிலிருந்து தானாகவே நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பான மாதிரிகள் சிலவற்றை பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே முன்வைத்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் தற்பொழுது காணப்படும் பாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் தேவையை பேராசிரியர் சுதந்த லியனகே இங்கு சுட்டிக்காட்டினார்.
மிகவும் பொருத்தமான கலப்பு தேர்தல் முறையொன்று நாட்டுக்கு அவசியம் என்ற பொதுவான நிலைப்பாடு இருப்பதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இங்கு தெரிவித்தார்.
தொகுதியொன்றுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய உறுப்பினர் ஒருவரின் அவசியத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர திசாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே, சாகல காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகளும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்ற விசேட குழு அடுத்ததாக எதிர்வரும் 13ஆம் திகதி கூடும் என அக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.